கூகுளுக்குத் தமிழ் தெரியாது.

google tamil
ஆன்மிகம், ஆன்மீகம்.
சன்னதி, சன்னிதி.
கருப்பு, கறுப்பு
- இது போன்ற சொற்களில் எது சரி என்ற குழப்பம் வருகையில் பலரும் கூகுளில் இச்சொற்களைத் தேடி, கூடுதல் முடிவுகளைக் கொண்ட சொற்களைச் சரியெனத் தேர்கிறார்கள்.
ஆனால், இந்த வழிமுறை எப்போதும் சரியாக இருக்கத் தேவை இல்லை.
எடுத்துக்காட்டுக்கு,
முயற்சிக்கிறேன் என்று எழுதுவது தவறு. கூகுள் தேடலில் இதற்கு 15,900 முடிவுகள் கிடைக்கின்றன.
முயல்கிறேன் என்று எழுதுவது சரி. ஆனால், கூகுள் தேடலில் இதற்கு 9,300 முடிவுகள் தான் கிடைக்கின்றன.
இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.
சென்ற பத்தியில் “இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது” என்பதில் “
இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம்
” என்பதை அடிக்கோடிட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஒருங்குறியில் இல்லாத பல தமிழ் இணையத்தளங்களை கூகுள் திரட்டுவதில்லை. இன்னும் படிமங்களாகவே கூட தமிழ் எழுத்துக்களைக் காட்டும் வழக்கமும் இருக்கிறது. இவை போக, கூகுளால் அணுகித் திரட்டப்படாத பல தமிழ் இணையத்தளங்களும் இருக்கலாம். திரட்டப்பட்ட பக்கங்களில் இருந்து கூட எல்லா பக்கங்களையும் தேடல் வினவல்களுக்கு கூகுள் பயன்படுத்துவதில்லை. முக்கியமில்லாத பக்கங்கள், ஒரே போல் உள்ள பக்கங்களைத் தவிர்த்து விடுகிறது. இணையத்தில் உள்ள தமிழ் ஒலிப்பதிவுகளில் உள்ள பேச்சுக்களைப் புரிந்து கூகுளால் எழுத்துப்பெயர்க்க முடியாது.
கூகுள் முடிவுகளில் ஒரு சொல் அதிகம் தென்படுகிறது என்பதற்காகத் தமிழ் அச்சு ஊடகங்கள், நூல்கள், மக்கள் பேச்சு வழக்கிலும் அச்சொல் கூடுதலாகப் புழங்குகிறது என்று முடிவுக்கு வர இயலாது. இணையத்தில் முழுமையாக உள்ளடக்கங்களை ஒருங்குறியில் ஏற்றும் தமிழ் அச்சு ஊடகங்கள் குறைவே. தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சு வழக்குகளோ இன்னும் அச்சு வடிவிலேயே கூட முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மை மக்களின் பேச்சு வழக்கைக் கொச்சையாகக் கருதும் ஆதிக்கப் போக்கு அச்சு ஊடகங்கள் தத்தம் எழுத்து மொழித் தேர்வில் பக்கச் சாய்வுடன் செயல்படும் என்றும் உணரலாம். பேச்சு மொழி வேறாகவும், உரைநடை எழுத்து மொழி வேறாகவும் இருக்கும் தமிழில் இது முக்கியமான விசயமாகும். தமிழைப் பொருத்த வரை எழுத்து மொழி மட்டுமே தமிழின் அதிகாரப்பூர்வ ஆவணம் கிடையாது. கற்றறிந்த தமிழறிஞர்களே தெரியாமல் திணறும் பல கலைச்சொற்கள் மக்கள் வாழ்வில் இலகுவாகப் புழங்குகின்றன. எனவே பேச்சு மொழியின் திறத்தையும் தரத்தையும் குறைத்து மதிப்பிடலாகாது.
தற்போது நன்கு படித்து, கணினி, இணைய அணுக்கம், எழுதுவதற்கான ஓய்வு நேரம், ஆர்வம் கூடியவர்களே தமிழ் இணையத்தில் எழுதுகிறார்கள். மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஒரு வீதம் கூட இருக்க மாட்டார்கள். இந்த ஒரு வீதத்திற்குக் குறைவான மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல், வயது, கல்வி, தொழில் பின்புலங்களிலும் கூடுதல் ஒற்றுமைகளைக் காணலாம். கணிசமானவர்கள் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இளைஞர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள். பெண்கள் தொகை குறைவு. இவர்களின் எழுத்துகளிலும் தனித்துவமான, பாசாங்கில்லாத, வட்டார வழக்குகளைக் காண்பது அரிது. ஏற்கனவே வெகுமக்கள் ஊடகங்கள் பின்பற்றும் மொழி நடையை அறிந்தோ அறியாமலோ பின்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, பெரும்பான்மை தமிழ் மக்களின் பேச்சு, எழுத்து வழக்குகள் உள்ளது உள்ளபடி ஒலி, எழுத்து வடிவில் பதியப்பட்டு ஆயத்தக்க நிலைக்கு வரும் வரை, இந்த சொற்பத் தமிழ் இணைய மக்கள் தொகையை ஒட்டு மொத்த உலகத் தமிழ் மக்கள் தொகையின் சார்பாகப் பார்க்க இயலாது.
மேற்கண்ட சிந்தனைகள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்த ஒரு சுவையான உரையாடலை அடுத்து எழுந்தவை.
இராமனுசன் என்ற பெயரைக் காட்டிலும் இராமானுஜன் / இராமானுஜம் / ராமானுஜம் என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் அவையே சரி என்ற வாதம் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா என்ற பெயரைக் காட்டிலும் சிறீலங்கா என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் ஸ்ரீ என்ற எழுத்தை ஒழித்து சிறீ, சிரீ என்றே எழுதத் தொடங்குவோமா என்று எதிர்வாதம் வைத்தால் சரியாக இருக்குமோ
நன்றி : ரவிசங்கர்
நன்றி: http://www.sankamam.com/

0 comments:

Post a Comment